×

வெங்காநல்லூர் கண்மாயில் குடிமராமத்து நடக்குமா?

ராஜபாளையம். அக்.24: ராஜபாளையம் பகுதியில் ஒரு சில கண்மாய்களில் மட்டும் குடிமராமத்து பணி நடந்த நிலையில், அனைத்து கண்மாய்களிலும் நடக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ராஜபாளையம் பகுதியில் போதிய மழை இல்லாததால், பல கண்மாய்களில் தேவையான அளவிற்கு தண்ணீர் தேங்கவில்லை. இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் ஒரு சில கண்மாய்களில் மட்டுமே குடிமராத்து பணியை
தொடங்கியுள்ளனர். அந்த பணிகளும் முழுமையாக நடக்கவில்லை. பல கண்மாய்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன. மேலும் நீர்வரத்துப் பகுதிகளில் அதிக கோரைப்புற்கள் முளைத்து நீர்வரத்துக்கு இடையூறாக உள்ளது. கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாததால், கிணற்றுப்பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலும் போதிய தண்ணீர் இல்லை. தற்போது பெய்து வரும் மழையினால் ஒரு சில கண்மாய்களுக்கு மட்டுமே நீர்வரத்து உள்ளது. தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் உள்ள கண்மாயும் புதர்மண்டிக் கிடக்கிறது. மதகுப்பகுதியில் சீரமைக்கப்படாமல் உள்ளது.

எனவே, தெற்கு வெங்காநல்லூர் கண்மாய் உள்பட அனைத்து கண்மாய்களிலும் குடிமராமத்து மூலம் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ராஜபாளையம் வட்டாரத்தில்  விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளை காப்பாற்றிட மானிய விலைகளில் விவசாய இடுபொருட்கள் வழங்கவும், உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை கொள்முதல் நிலையங்கள் அமைத்து வாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பட்டாசு மூலப்பொருள் 14 மூட்டை பறிமுதல்: 2 பேர் கைது